கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் 22வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்
- ஊனங்கள் இருப்பினும் சாதனை நிகழ்த்தியவர்களை கௌரவித்த நிகழ்வு
சென்னை, 2 மார்ச் 2024: 22-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் நிகழ்வின் ஒரு அங்கமாக, ஊனங்கள் இருப்பினும் சாதனைகள் படைத்த ஐந்து சாதனையாளர்களை FMCG துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான கவின்கேர், எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன் இணைந்து இன்று கவுரவித்து மகிழ்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் மற்றும் மாறுபட்ட துறைகளையும் சேர்ந்த ஊனமுற்ற தனிநபர்களின் சாதனைகளை வருடாந்திர நிகழ்வாக நடைபெறும் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி உலகறிய செய்திருக்கிறது. பிரபல ஆளுமைகள் பங்கேற்ற இந்நிகழ்வில், ஐஸ்வால் நகரில் அமைந்துள்ள காது கேளாதவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான எப்ஹாதா சிறப்பு பள்ளியின் மாணவர்களால் வழங்கப்பட்ட மிசோரம் – ன் தனித்துவமான செராவ் மற்றும் செஹ்லாம் நடனம் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. திறமையும், அழகும், கலையும், ஊனங்களையும் கடந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடியது என்பதற்கு இந்த நடனம் ஒரு அழகான சாட்சியமாக இருந்தது.
பாடலாசிரியரும், கதை வசனகர்த்தாவுமான திரு. மதன் கார்க்கி, சாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. கே.வி. ரமணி, திரைப்பட தயாரிப்பாளர் பரத் பாலா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் – ன் இயக்க செயல்பாடுகள் துறை தலைவர் திரு. சுரேஷ் ராமன், எல்வி பிரசாத் காலேஜ் ஆஃப் மீடியா ஸ்டடிஸ் – ன் முன்னாள் துறைத்தலைவர் – இயக்கம், திருமதி. லதா முருகன் ஆகியோரை உள்ளடக்கிய நடுவர் குழு உறுப்பினர்களால் இந்த ஆண்டு விருதைப்பெறும் நபர்கள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தடைகளை சமாளித்து, வெற்றி காண்பதில் அவர்களது திறன், அவர்களது சாதனைகளை நிகழ்த்துவதில் எதிர்கொண்ட சிரமங்களின் அளவு மற்றும் அவர்களது சாதனையின் தனித்துவ தன்மை ஆகிய அம்சங்களின் அடிப்படையில், இவ்விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின்போது கவின்கேர் பிரைவேட் லிமிடெட் – ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சி.கே. ரங்கநாதன் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற கவின்கேர் எபிலிட்டி விருதுகள், ஊனமுற்ற நபர்களின் நம்பிக்கை உணர்வையும், சாதிப்பதற்கான ஆர்வத்தையும், மனஉறுதியையும் கொண்டாடி வந்திருக்கிறது. சவால்களை வெற்றி காணவும், தடைகளை எளிதாக தகர்த்தெறியவும் அவர்களது அசாதாரண திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் இச்சாதனையாளர்கள் உலகிற்கு காட்டியிருக்கின்றனர். இச்சாதனையாளர்களை நமது நாடு அறியுமாறு அவர்கள் மீது ஒளிவெள்ளம் பாய்ச்சுகின்ற செயல்தளமாக இருப்பதன் மூலம் அவர்களது துடிப்பான பயணத்தில் ஒரு சிறிய பங்கை ஆற்றியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நமது செயலாற்றலின் எல்லைகளை இன்னும் அதிகமாக விரிவுபடுத்த வேண்டுமென்ற உத்வேகத்தை வழங்கியிருக்கும் இந்த வெற்றியாளர்களை நெஞ்சார நான் பாராட்டுகிறேன். மனதில் ஆழத்திலிருந்து அவர்களுக்கு நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.” என்று கூறினார்.
எபிலிட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனரும், கௌரவ செயலாக்க இயக்குனருமான Ms. ஜெயஸ்ரீ ரவீந்திரன், வெற்றியாளர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளைப் பாராட்டி பேசியதாவது: “இப்போது 22-வது ஆண்டாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்நிகழ்வில் ஊனங்கள் இருப்பினும், பிரமிக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் வெற்றியாளர்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வை நடத்தும் ஒவ்வொரு முறையும் உத்வேகமளிக்கும் ஒரு துடிப்பான பயணமாக இது இருந்து வருகிறது. ஊனம் அல்லது திறனிழப்பு என்பது, திறமைகள் வெளிப்படுவதை தடை செய்வதில்லை என்ற உண்மைக்கு ஒரு வலுவான சாட்சியமாக கவின்கேர் எபிலிட்டி விருதுகள் திகழ்கின்றன. மேலும், சிறப்பான இச்சாதனையாளர்களை கௌரவித்து, உலகறியச் செய்வது, தடைகளை தகர்த்தெறிவதற்கும், அனைத்து தரப்பினரையும் அரவணைத்து உள்ளடக்க வேண்டுமென்ற குறிக்கோளை ஊக்குவிக்கின்ற ஒரு மிக முக்கிய நோக்கத்திற்கு உதவுகிறது. எண்ணற்ற தடைகளை சமாளித்து, வெற்றி கண்ட இச்சாதனையாளர்களின் பலங்கள், திறமைகள் மற்றும் சாதனைகளை கொண்டாடும் இத்தருணம், நமது நாட்டில் இத்தகைய சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் ஏன் இன்னும் காலம் தாழ்த்தி நிகழ்கிறது என்ற கேள்வியை என் மனதில் எழுப்புகிறது. இவ்விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் மற்றும் விருது வென்ற ஒவ்வொருவரும் தைரியம் மற்றும் மனஉறுதியின் உண்மையான உணர்வை தங்களுக்குள்ளே ஆழமாக கொண்டிருக்கும் அற்புத மனிதர்கள். இந்த நிகழ்விற்கு தளராத ஆதரவை வழங்கி வருவதற்காக உங்கள் அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று உங்களோடு நாங்கள் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கை அனுபவங்கள் உங்களது கண்ணோட்டங்களையும், மனபான்மைகளையும் மறுஆய்வு செய்யுமாறு உங்கள் ஒவ்வொருவரையும் சவாலுக்கு உட்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஒருங்கிணைந்து செயல்படுவோமென்றால், அதிக புரிதலும், ஆதரவும் கொண்ட மற்றும் அனைத்து மக்களையும் சமஅளவில் ஏற்று அங்கீகரிக்கின்ற சமூகத்தை அடைவதற்கான பாதையை நம்மால் அமைக்க முடியும்.”
2003 – ம் ஆண்டு நிறுவப்பட்ட கவின்கேர் எபிலிட்டி விருதுகள், ஊனமுற்ற சாதனையாளர்களின் மிகச்சிறப்பான சேவைகளையும் மற்றும் அவர்களது சாதனைகளையும் அங்கீகரித்து கௌரவிக்கிறது. தேசிய அளவிலான இந்த புகழ்பெற்ற விருது கீழ்வரும் மூன்று வகையினங்களின் கீழ் வழங்கப்படுகிறது: கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் விருது, கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்டரி விருது மற்றும் கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது.
கவின்கேர் எபிலிட்டி அவார்ட்ஸ் 2024 – ஐ பெற்ற சாதனையாளர்கள்:
கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது
டாக்டர். கேதநா எல் மேத்தா – மும்பை, மஹாராஷ்டிரா
டாக்டர். கேதநா மேத்தா, முதுகுத்தண்டு காயமடைந்த நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான அவரது பங்களிப்பிற்காகவும் மற்றும் தடைகளை தகர்த்து சாதிக்க வேண்டுமென்ற அவரது தணியாத தாகத்திற்காகவும் ஊனமுற்ற நபர்களின் நலனுக்காக செயலாற்றுபவர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார். 1995-ம் ஆண்டில் பாரா கிளைடிங் நிகழ்வில் நடந்த விபத்து முதுகுத்தண்டில் காயத்தை ஏற்படுத்தி, நீண்டகால மறுவாழ்வு சிகிச்சையை இவருக்கு அவசியமாக்கியிருந்தது; ஆனால், இந்த கடுமையான பாதிப்பு, வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டுமென்ற அவரது உள்ளார்ந்த தாகத்தை ஒருபோதும் தணிக்கவில்லை; அவரது அறிவாற்றலையும், கல்வி மீதான ஆற்றலையும் சிறிதளவும் மங்கச் செய்யவில்லை. இவரது கல்வி சார்ந்த மேன்மைக்கான அங்கீகாரமாக 1999-ம் ஆண்டில் Fellow of the Institute of Management Consultants of India என அவர் கௌரவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2009-ம் ஆண்டில் உடல்நல பராமரிப்பு மறுவாழ்வு மேலாண்மை மீதான இவரது ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. முதுகுத்தண்டு காயமடைந்த நபர்களின் வாழ்க்கைத்தரத்தை அனைத்து அம்சங்களிலும் மேம்படுத்த வேண்டுமென்ற இவரது ஆழமான விருப்பத்தின் காரணமாக, 2001-ம் ஆண்டில் ‘நினா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பினை இவர் நிறுவினார். இல்லம் அடிப்படையிலான மற்றும் மெய்நிகர் முறையிலான மறுவாழ்வு சேவைகள் மற்றும் வழிகாட்டல்களிலிருந்து விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் வெளியார்ந்த செயல்திட்டங்கள் வரை, ஒவ்வொருவருக்கும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை ஏதுவாக்க நினா ஃபவுண்டேஷன் தளர்வின்றி செயலாற்றி வருகிறது.
கவின்கேர் எபிலிட்டி அவார்டு ஃபார் எமினென்ஸ்
வித்யா Y – பெங்களூரு, கர்நாடகா
பள்ளிகளில் கல்வி பயில விரும்புகின்ற பார்வைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை ஊக்குவிக்கவும் மற்றும் அவர்களை திறனுள்ளவர்களாக ஆக்கவும் செயலாற்றி வருகின்ற ‘விஷன் எம்பவர்’ என்ற அமைப்பின் நிறுவனர் வித்யா Y. பார்வைத்திறனற்ற மாணவர்கள் STEM கல்விப்பிரிவில் பொதுவாக சேர்வதில்லை என்பதே இதற்கு காரணம். பள்ளிகளில் STEM பிரிவில் பாடத்திட்டங்களை கற்பிக்கவும் மற்றும் கற்றுக்கொள்ளவும் உதவுகிற பாடங்களையும், கற்பித்தலுக்கான சாதனங்களையும், தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதற்காக பிற பார்ட்னர்களோடு இணைந்து இந்த அமைப்பு செயலாற்றுகிறது. இந்த முன்னெடுப்பும், முனைப்பும் வித்யாவின் தனிப்பட்ட பயணத்தின் ஒரு விளைவாகும். பள்ளியில் கணிதம் மிகவும் பிடித்த பாடத்திட்டமாக இருந்த போதிலும், அவரது பார்வையின்மையின் காரணமாக, அதில் சேர வேண்டாமென்று ஊக்கமிழக்கும் வகையிலேயே எப்போதும் சொல்லப்பட்டிருந்தது. இருப்பினும், தனது விருப்பமுடிவில் விடாப்பிடியாக இருந்த வித்யா, வெற்றிகரமாக பிசிஏ படிப்பை நிறைவு செய்தார். பார்வை திறனற்றவர் படிப்பதற்கான பாடத்திட்ட புத்தகங்கள், உபகரணங்கள் இல்லாத சவால்களையும் மற்றும் புரிதல் இல்லாத சூழல்களையும் எதிர்கொண்டு சமாளித்த இவர், அவரது பேட்சில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். வேலைவாய்ப்பை தேடும் முயற்சியிலும் வெற்றி பெறுவதற்கு அவர் கடும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. டெலிபோன் ஆபரேட்டர் போன்ற பார்வையற்றோருக்கான பணிகள் என்ற திசையை நோக்கியே பல நபர்களும், நிறுவனங்களும் இவரை அனுப்ப முயற்சித்தன. அப்போதுதான் வேலைவாய்ப்புகளை தேடுவதற்கு இனிமேலும் தான் முயற்சிப்பதில்லை என்ற முடிவுக்கும், அதற்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நபராக ஆகவேண்டும் என்ற உறுதியான முடிவை இவர் எடுத்து அதை செயல்படுத்தியிருக்கிறார்.
கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்டரி அவார்ட்ஸ்
வினயானா குரானா – புது டெல்லி
வினயானா குரானா ஒரு எழுத்தாளர், கவிஞர், வலைதள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். இப்பெண்மணியின் எழுத்து படைப்புகள் வழக்கமான கண்ணோட்டங்களை மனங்களிலிருந்து அகற்றுவதையும், அனைவரையும் ஒருங்கிணைந்து உள்ளடக்கும் தன்மையை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டவை. பெருமூளை வாதத்தால் ஏற்பட்ட பேச்சு மற்றும் நகர்வுத்திறன் பாதிப்புகள் என்ற சவால்களையும் விட இவரது நுண்ணறிவுத் திறனும், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலும் தான் இவரது ஆளுமைப் பண்பின் மிக முக்கியமான அம்சங்களாக இருந்திருக்கின்றன. தனது மனதில் சிந்தனைகளை வெளிப்படுத்த வினயானா எப்போதும் விரும்பியிருக்கிறார். தனது எண்ணங்களை எழுத இயலாத நிலையிலிருந்து இன்றைக்கு அவரது கவிதைகள், கதைகள், பிளாகுகள் மற்றும் புத்தகங்களை கணினியில் தட்டச்சு செய்யும் அளவிற்கு மாறியிருக்கும் இவரது வெற்றிகர பயணம் உண்மையிலேயே போற்றுதலுக்குரியது. வினயானா தற்போது எம்ஃபில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். ஊனமுற்றோருக்கான ஒரு சிறப்பு பள்ளியிலிருந்து மாறி வழக்கமான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்திருக்கும் இவரது சொந்த கல்விசார் பயணம், அனைவரையும் உள்ளடக்குகின்ற கல்வி என்ற தலைப்பை அவரது எம்ஃபில் பட்டப்படிப்பிற்கான ஆய்வு தலைப்பாக தேர்வு செய்ய இவரை தூண்டியிருக்கிறது. இந்த இளம் பெண்ணின் மனோதைரியமும், என்றும் நிலைத்திருக்கும் நேர்மறை நம்பிக்கை உணர்வும் இவரை எப்போதும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்தவராக வைத்திருக்கிறது. “இந்த சக்கர நாற்காலியில் நான் அமர்ந்திருக்கலாம்; ஆனால், எனது மனது எப்போதும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது”, என்கிறார் இப்பெண்மணி.
ஐஸ்வர்யா T V- செகந்திராபாத் – தெலங்கானா
ஓவியக்கலைஞர், கதை வசனகர்த்தா, ஆலோகர், தொழில்முனைவர் என பல்வேறு பரிமாணங்களை கொண்ட ஆளுமையாக ஐஸ்வர்யா திகழ்கிறார். மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது மூளையில் உருவான ஒரு கட்டி இப்பெண்ணின் பார்வைத்திறனை பறித்து விட்டது. எனினும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஐஸ்வர்யாவுக்கு ஸ்க்ரீன் ரீடர் சாதனத்தை கண்டறிந்தது அவரது வாழ்க்கையையே மாற்றுவதாக அமைந்தது. எல் வி பிரசாத் கண் மருத்துவமனையில் மறுவாழ்வு நடவடிக்கையில் அவரது பணியின்போது ஒரு விழிப்புணர்வு ஒலிப்பேழையை உருவாக்க பங்களித்த அவர், அதன்பிறகு வீடியோ திரைப்படங்களை இயக்கினார். கலையில் அவரது ஆர்வம் மீண்டும் தூண்டப்பட, அதனை தொடு உணர்வு கொண்டதாகவும், அணுகக்கூடியதாகவும் ஆக்குவது மீதும் ஐஸ்வர்யா கவனம் செலுத்தினார். பார்வைத்திறனிழப்பால் பாதிக்கப்பட்டதற்குப் பிறகு முதல் 10 ஆண்டுகளை அவரது சொந்த வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்வதற்காக செலவிட்ட அவர், அதன்பிறகு பார்வைகுறைபாடுகள் உள்ள நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண்பதை தனது லட்சியமாகவும், முயற்சியாகவும் மாற்றிக் கொண்டார். பார்வைக்குறைபாடுள்ள நபர்கள், அவர்களது குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப எதையும் லேபிளிட அனுமதிக்கும் ஒரு செயலியான ‘Space Felt’ என்பதை இவர் உருவாக்கவும் இது வழிவகுத்தது. ஐஸ்வர்யாவின் இப்பயணம் இன்னும் தொடர்கிறது. இப்பெண்ணின் வாழ்க்கைக் கதை, இழப்பின் கதையாக மிக எளிதாக முத்திரையிடப்பட்டிருக்கலாம். பெற்றோர்கள் இருவரையும் இழந்த ஒரு குழந்தை, தனது பார்வைத்திறனையும் மற்றும் பல்வேறு கனவுகளையும் இழந்த நபர் என்ற அடையாளத்தை ஒதுக்கித் தள்ளிய அவர், அவரது சொந்த அடையாள முத்திரையை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இன்றைக்கு இப்பெண்ணின் வாழ்க்கை கதை, எதையும் சாதிக்க முடியும் என்ற அசையாத நம்பிக்கைக்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது.
சோன்சின் ஆங்மோ – புது தில்லி
சோன்சின் – ன் சாதனைகள், சிறப்பானவை, உத்வேகம் அளிக்கக்கூடியவை. இமாச்சலபிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இப்பெண், நான்கு மாத காலஅளவின்போது இவரது பார்வைத்திறனை படிப்படியாக இழந்தார். பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சவால்களை வெற்றிகரமாக சமாளித்த இவர், பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது புதிய உலகம் இவருக்காக தனது கதவுகளை திறந்தது. கபடி, நீச்சல் மற்றும் மாரத்தான் ஓட்டம் ஆகியவை மட்டுமின்றி, கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டம் ஆகியவற்றிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெற்றி பதக்கங்களை வெல்வதை வழக்கமாக ஆக்கிக்கொண்ட ‘சோன்சின்’ சென்ற இடங்களிலெல்லாம் அவரது வெற்றி முத்திரையை பதித்திருக்கிறார். மலையேற்றம் தொடர்பாக ஒரு உள்ளடக்க பாடத்திட்டத்தைப் படித்து, அதில் சிறப்பாக தேறியதன் காரணமாக அதன்மீது இவரது ஆர்வம் பன்மடங்காக உயர்ந்தது. அதன் பிறகு சியாச்சின் பனிப்பாறையிலும், மவுண்ட் கனாமோ சிகரம் (19,635 அடி) மற்றும் மவுண்ட் காங் யாட்சே 2 (20, 459 அடி) என்பவற்றிலும் ஏறி சாதனைபடைத்திருக்கிறார். விளையாட்டிலும், மலையேற்றத்திலும் இவர் கொண்டிருக்கும் பேரார்வத்திற்கு வரம்பே இல்லை. தனக்கு மட்டுமின்றி, தன்னைப்போன்ற மற்றவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதற்காக அதிக சிரமமான பாதையையே சோன்சின் எப்போதும் தேர்வு செய்திருக்கிறார். பார்வைத்திறன் குறைபாடு என்பது பல நேரங்களில் சாதிக்க விடாமல், நம்மை கட்டுப்படுத்தக் கூடியது என்று பெரும்பாலும் பலரும் நினைப்பதில் உண்மையில்லை என்று சமூகத்திற்கு காட்டுவதற்காக கடினமான பாதையை இவர் தேர்வு செய்கிறார்; அதில் வெற்றிச் சாதனைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), சரும கிரீம்கள் (ஃபேர் எவர் மற்றும் ஸ்பின்ஸ்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட் மற்றும் மென்ஸ் குரூமிங் (பைக்கர்ஸ்)), D2C பர்சனல் கேர் புராடக்ட்கள் (பட்ஸ் மற்றும் பெர்ரிஸ்) ஆகியவை அடங்கும். இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. “பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்” என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.
எபிலிட்டி ஃபவுண்டேஷன் குறித்து: 1995 – ம் ஆண்டு தொடங்கப்பட்ட எபிலிட்டி ஃபவுண்டேஷன், சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு நாடெங்கிலும் தேசிய அளவில் பல்வேறு வகையினங்களின் கீழ் உள்ள ஊனமுற்றோர்கள் நலனுக்காக பணியாற்றிவருகிற ஒரு முதன்மை அமைப்பாகும். ஊனமுற்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சமவாய்ப்புகள் உள்ள சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாடெங்கிலும் இது தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஊனமுற்ற நபர்கள் கொண்டிருக்கும் சாத்தியமுள்ள திறனையும், ஆற்றலையும் வலியுறுத்துவதன் வழியாகவும் புதுமையான முன்னெடுப்புகள் வழியாக ஊனமுற்றோர்கள் மற்றும் ஊனமற்ற மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப எபிலிட்டி ஃபவுண்டேஷன் உறுதியாக செயலாற்றி முன்னேற்றம் கண்டு வருகிறது. சமத்துவம் நிலவும் ஒரு குடிமை சமூகம் என்ற குறிக்கோளை அடைய பிரசுரித்தல், பணி வாய்ப்பு வழங்கல், ஊடகம், கலாச்சாரம், கொள்கை அமலாக்கம், சட்டம் இயற்றல் மற்றும் மனித உரிமைகள் என பல துறைகளில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. உடல்சார்ந்த ஊனங்களை விட, சமூகத்தின் மனோபாவங்களால் உருவாக்கப்பட்ட தடைகளே மக்களை உண்மையிலேயே வளர்ச்சி காண விடாமல் தடுக்கின்றன என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு எபிலிட்டி ஃபவுண்டேஷன் செயலாற்றி வருகிறது . சரியான நேரத்தில், சரியான வாய்ப்புகளை கிடைக்குமாறு செய்யும் குறிக்கோளின் மீது தளராத பொறுப்புறுதியினை இது கொண்டிருக்கிறது. அனைவரும் சமஅளவில் போட்டியிடுகின்ற களமும் இருக்குமானால், இன்னும் அதிகமானவை சாத்தியமே. இதற்கு அவசியப்படுவதெல்லாம் ஏற்றுக்கொள்கிற, பக்குவப்பட்ட ஒரு திறந்த மனநிலை மட்டுமே என்பதே இதன் உறுதியான நம்பிக்கையாகும்.
Open Mic Tamil Here For Entertainment