Home / cinema / Cinema News / ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார்  – நடிகர் ராதாரவி

ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார்  – நடிகர் ராதாரவி

நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி  மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்கள் ராதாரவி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்கள். செங்களம் வெப் தொடர் குழுவினருக்கு ராதாரவி விருது வழங்கினார். 

நடிகரும் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோ (DANI’S THEATRE STUDIO) என்னும் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் நிறுவனருமான டேனியல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றுப் பேசும் போது,
நான் அழைத்ததை மதித்து, என் மீது இருக்கிற அன்பாலும் நம்பிக்கையாலும் அதே போல் கலை மீது கொண்ட ஆர்வத்தாலும் இந்த நிகழ்விற்கு வந்திருக்கின்ற நல்ல உள்ளங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் உருவாக்கத்தில் பலர் பலவிதங்களில் எனக்கு உதவி இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் கலைத்தாயின் தவப்புதல்வனான அண்ணன் ராதாரவி அவர்கள்.

நான் முதன் முதலில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ராதாரவி அண்ணனிடம் தான்.  நல்ல முயற்சி இது, நீ மிகுந்த திறமைசாலி, சிறப்பாக இந்த நடிப்புப் பயிற்சிப் பட்டறை வளரும் என்று ஊக்கம் தந்தார். அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இங்கு இரண்டு விதமான மனிதர்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். ஒரு பிரிவினர் நான் எல்லாம் நடிக்கும் போது எவ்வளவு பெரிய ஆள், இப்பொழுதெல்லாம் என்னை யாரும் கண்டுகொள்வதே இல்லை, விருது கொடுக்க வேண்டாம், ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு கூட அழைப்பதில்லை என்று புலம்புபவர்கள்.

இரண்டாவது பிரிவினர் இது நம் வீட்டு ஃபங்ஷன். நான் இல்லாமலா, ஏன் இப்படி ஃபார்மலாக கூப்பிடுகிறீர்கள் என்றெல்லாம் கூறிவிட்டு கடைசி வரை போனைக் கூட எடுக்காமல் காணாமல் போகிறவர்கள்.  அவர்கள் யார் என்று கூட நான் சொல்லிவிடுவேன். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. என் நண்பர்கள் சிலர் இது குறித்துப் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.  இருந்தும் நான் ஏன் பேசுகிறேன் என்றால் அவர்கள் காதுகளுக்கு இது செல்ல வேண்டும் என்பதால் தான்.

நான் 2004ல் இருந்து சினிமாவில் இருக்கிறேன். சினிமாவில் இருப்பவர்களின் நேரம் எப்படிப்பட்டது எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும். ஏதோ நான் என் வீட்டு காதுகுத்து விழாவிற்கும் கூழ் ஊத்தும் திருவிழாவிற்கும் அழைப்பது போல் நினைத்துக் கொள்கிறார்கள்.  இது முழுக்க முழுக்க சினிமா சார்ந்து, நடிப்பு சார்ந்து இயங்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் விழா. இதற்கு வர அவர்கள் அவ்வளவு தயங்குகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான். பெரிய பெரிய நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் கடைசி வரைக்கும் வீட்டிலேயே இருக்க வேண்டியது தான்.

நான் இந்தப் பட்டறையை நடத்துவதன் மூலம் மூட்டை மூட்டையாக பணத்தை வாரிக் கொண்டு செல்லவில்லை. பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் நான் இதை நடத்தி வருகிறேன். எனக்கும் இந்த மாணவர்களுக்கும் எந்த அறிமுகமும் கிடையாது. ஒரே தொடர்பு அவர்களும் கலைக்குள் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் கலைத்துறைக்குள் இருப்பவன் என்கின்ற முறையில் அவர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிட நினைக்கிறேன். இந்தப் பட்டறைக்கு வரும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கிறேன். என் அம்மா கூட பைசா பிரயோஜனம் இல்லாத இதை ஏன் நீ செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள்.  உண்மைதான். இன்னொரு துயரமான விசயம் என்னவென்றால், அண்ணன் ராதாரவி அவர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆன உங்கள் மூலமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் என்று எண்ணி, ஒருவரிடம் அதுகுறித்துப் பேசி வந்தேன். அவர் இன்று வரை பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார்.  ஒரு மேடையில் அண்ணன் ராதாரவி அவர்கள் ஏன் வராதவர்களைப் பற்றிப் பேசி கொண்டிருக்கிறாய் வந்தவர்களை வாழ்த்திப் பேசு என்று கூறியதை நினைவில் கொண்டு, வராதவர்களை மறந்துவிட்டு, இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன்.

இந்த நிகழ்வின் ரேடியோ பாட்னர் ஜாவித் பிரதர், இந்த நிகழ்விற்கான டிவி பாட்னராக இருக்கும் ஆதித்யா சேனலின் நிர்வாகத் தலைமைக்கும், சோழன் மெஸ் பிரவின் அவர்களுக்கும் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற செங்களம் அணியினருக்கும் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுக்க விரும்புகிறேன். இந்த நிகழ்விற்கு மட்டுமின்றி இனி எதிர்காலத்திலும் சினிமா சார்ந்து பட்டறையின் மாணவர்களுக்கு பல உதவிகள் புரிய இருக்கும் பிரதீஷ் ஜோஸ் அவர்களுக்கும் வணக்கங்கள். பின்னர் புதுமுகமாக அறிமுகமாகி சிறப்பாக நடித்த நடிகை யார் என்று எங்கள் பட்டறையில் விவாதம் எழுந்த போது மாணவர்கள் தேர்வு செய்த பெயர் அபர்ணதி. ஜெயில், தேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், இது என்னுடைய தேர்வு மட்டும் அல்ல, மாணவர்கள் நாளை இந்த துறைக்குள் வரப் போகிறவர்கள், என்கின்ற முறையில் அவர்களே அபர்ணதியையும் அங்கீகரிக்க விரும்பினார்கள். அபர்ணதி அவர்களுக்கும் வணக்கங்கள். என் அன்புத் தோழியும் மாநாடு திரைப்படத்தில் எங்களோடு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவருமான அஞ்சனா கீர்த்தியையும் வரவேற்கிறேன். பின்னர் என் அன்பு அண்ணன் வக்கீல் கோகுலகிருஷ்ணன் அவர்களையும் வரவேற்கிறேன்.  இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருமே என் மீது கொண்ட அன்பால் வந்திருப்பவர்கள். என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன். என்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சுந்தரபாண்டியன், செங்களம் வெப் தொடர் ஆகியவற்றின் இயக்குநரான எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும் போது, “நான் சிறுவயதில் திரையில் பார்த்து வியந்த ஆளுமை ராதாரவி சார் அவர்கள். அவர் சினிமாவையே கட்டி ஆண்ட ஒரு காலம் அது. அவர் கைகளால் இந்த விருதைப் பெருவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஒரு படைப்பாளிக்கு வெற்றி என்பது அடுத்த படத்தில் சம்பள உயர்வாக வரும், அல்லது பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் விட நீங்கள் கொடுக்கின்ற இந்த கைதட்டல் தான் எங்களுக்கான மிகப் பெரிய விருது. டேனியல் உங்களுக்குப் பிடித்த வெஃப் தொடர் எது என்று கேட்ட பொழுது எல்லோரும் செங்களம் என்று கூறினீர்கள், அதை நான் மிகப்பெரிய விருதாக கருதுகிறேன். டேனியல் இந்த பயிற்சிப் பட்டறையை ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நன்றாகத் தெரியும். பல இன்னல்களுக்கு நடுவில் தான் இதைத் துவங்கினார். இது மிகப்பெரிய வெற்றி பெரும் என்று நான் நம்புகிறேன்.  ஏனென்றால் நண்பர் டேனியல் திரையில் மட்டுமே நடிப்பவர். அவர் எதையுமே மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். சரி என்று நினைப்பதை பேசிவிடுவார். அவரிடம் எப்பொழுதுமே உண்மை இருக்கும். அதனால் தான் தைரியமாகச் சொல்கிறேன் இந்த நடிப்பு பயிற்சிப் பட்டறை மிகப்பெரிய வெற்றி பெறும் என்று.  உங்களின் விருது தங்களுக்கு கிடைக்காதா என்று வருங்கால கலைஞர்கள் ஏங்கும் நிலை கண்டிப்பாக வரும்.  முதலில் செங்களம் தொடருக்கு விருது வாங்க சற்று தயக்கம் இருந்தது. ஏனென்றால் டேனியலும் செங்களத்தில் பங்காற்றியவர்.  அவர்களுக்குள்ளேயே விருது கொடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் டேனி பட்டறையில் இருந்து எல்லோருக்கும் விருது கொடுத்ததைப் பார்த்ததும் சந்தோசமாகிவிட்டேன். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. செங்களம் தொடரை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது,
இங்கே கூடி இருக்கும்  என் குடும்பத்தை சார்ந்தவர்களே, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான் உள்ளதை சொல்வது உங்களுக்கு ஏடாகூடமாகத் தெரிகிறது. “டேய் நீ என்ன நல்லவனா..?” என்று கேட்டார் ராதாரவின்னு போட்டுவிடுவார்கள். ஏனென்றால் அப்படிப் போட்டால் தான் ஆடியன்ஸ் அதை க்ளிக் செய்து பார்க்கிறார்கள். அதை க்ளிக் செய்துவிட்டால் இவர்களுக்கு காசு. அதனால் இது போன்று வசீகரமான தலைப்பு வைத்து வரும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பது இல்லை.

பத்திரிக்கை நண்பர்களுக்கும் என் வணக்கங்களைக் கூறிக் கொண்டு, நான் உங்களிடம் கூற விரும்புவது இது ஒன்று தான்.  நீங்கள் எல்லாம் இது போன்ற சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இவர்களில் யாராவது எதிர்காலத்தில் ஒரு புரட்சித் தலைவரோ, நடிகர் திலகமோ இல்லை காதல் மன்னனாகவோ வரலாம்.. எல்லோரும் பெரிய பெரிய நிகழ்வுகளுக்குத் தான் வருவோம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாக மாறும், சின்ன இடம் பெரிய இடமாக மாறும். இதுதான் வாழ்க்கை. மேடையில் அமர்ந்திருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களுக்கும் வணக்கம். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், அவர் இயக்கவிருக்கும் ஒர் வெப் சீரிஸ் ஒன்றில் என்னை நடிக்க வைக்கலாம் என்று நினைத்ததாகவும், பின்னர் சிலர் வேறு மாதிரி சொன்னதால் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் பிரபாகரனிடம் இனி நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீயே என் வீட்டுக்கு வந்துவிடு, நான் பத்து இலட்சம் கேட்பேன், நீ முடியாது ஒரு இலட்சம் தான் கொடுக்க முடியும் என்று கூறு, எதுவாக இருந்தாலும் நாமே பேசிக் கொள்வோம். அப்பொழுது தான் நான் என்ன பேசுகிறேன் என்பதாவது உனக்குத் தெரியும் என்றேன்.

தேன் படத்தின் நாயகி அபர்ணதி மற்றும் நடிகை அஞ்சனா கீர்த்தி ஆகியோருக்கும் வணக்கம். ஏன் நீங்கள் எல்லாம் நன்றாக யோசித்து வாயில் நுழையாத ஒரு பெயரையே சூட்டிக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. சாவித்ரி, பத்மினி என்று பெயர் வைத்துக் கொண்டால் அழைப்பதற்கு எளிதாக இருக்கும். எடிட்டர் டான் பாஸ்கோ, ஸ்பான்சர் பிரவீண், அட்வகேட் கோகுலகிருஷ்ணன், அனைவருக்கும் வணக்கம். இது தவிர வேறு யார் பெயரையாவது விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.  உங்களை உதட்டளவில் மறந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் உள்ளத்தளவில் மறக்க மாட்டேன்.

இந்த நிகழ்விற்கு இடமளித்த பிரசாத் நிறுவனத்தாருக்கு நன்றி, இந்த நிகழ்வை டேனி பிரசாத் நிறுவனத்தில் நடத்துவது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் பிரசாத் என்பது ஒரு சகாப்தம்.  நான் இப்படி பேசுவதால் பிரசாத் நிர்வாகம் என் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளுக்கு எந்த சலுகையும் வழங்காது. இந்தப் பள்ளி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக கண்டிப்பாக வளரும்.  அதற்கு ஒரு காரணம் பிரசாத் நிர்வாகம் என்றால், மற்றொரு காரணம் டேனியின் தாய் இந்த நிகழ்விற்கு வந்திருப்பது. நானும் நாடகங்கள் நடிக்கும் காலத்தில் எல்லாம் என் தாயையும் உடன் அழைத்துச் செல்வேன்.
49 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். 400 படங்களுக்கும் மேல் நடித்திருப்பேன்.  இருந்தாலும் டேனியல் செய்யும் இந்த நிகழ்வு ஏன் என்பது எனக்கு இன்னும் முழுதாகப் புரியவில்லை. முதலில்  என்னை நடிப்புப் பயிற்சிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நான் அவரிடம் கேட்டேன், எதற்காக இதெல்லாம் செய்கிறாய் என்று. அதற்கு அவர், என் தாய் கூட 10 பைசா பிரயோஜனம் இல்லாத வேலையை ஏன் செய்றேன்னு கேக்குறாங்க..” என்றார்.  ஆக எனக்கு இந்த பள்ளியை ஏன் தொடங்குறான் என்று சந்தேகம் இருந்தது. படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறதா என்று கேட்டேன்.. அவனது பதிலில் சின்ன இழுவை இருந்தது.  நல்லா நடிச்சா இப்பெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க,  நல்லா நடிச்சி கூட நடிக்கிறவுங்கள விட இவன் முகம் மக்கள் மத்தியில பரிச்சியம் ஆகிவிட்டது என்றால், இவனை எப்படி வெட்டி விடலாம் என்று தான் சக நடிகர்கள் யோசிப்பார்கள். எப்படி வெட்டி விடலாம் என்று யோசிக்கும் நடிகர்களுக்குத் தான் இந்தக் கடவுள் வாய்ப்பை தருகிறார்.

நானும் கோயிலுக்கெல்லாம் சென்று சாமி கும்பிடுபவன் தான்.  காரசாரமாக கும்பிடுவேன். என் வீட்டில் வந்து பாருங்கள். என் ஆதர்ச நடிகர்கள் ஒவ்வொருவரின் போட்டோவும் என் வீட்டில் இருக்கிறது. இந்த நடிகர்களின் போட்டோக்கள் வேறு எந்த நடிகர் வீட்டிலும் இருக்காது, இதை ஒரு சவாலாகவே கூறுகிறேன். நிறைய பேருக்கு அதில் இருப்பது யார் என்றே தெரியாது. ஒருமுறை நடிகர் விவேக் என் வீட்டிற்கு வந்த போது அவரால் பழைய நடிகர் சாரன் மணிபால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இப்படி முக்கியமான நடிகர்கள் போட்டோ என் வீட்டில் இருக்கிறது. அவர்களை கும்பிட்டுவிட்டு தான் நான் மேக்கப் போடத் துவங்குவேன். ஒரு முறை ஒரு புதிய பேச்சாளர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு, இதெல்லாம் உங்களுக்குப் பிடித்த நடிகர்களா..? என்று கேட்டார். நான் இல்லை இவர்கள் எல்லாம் சரித்திர நடிகர்கள் என்று சொன்னேன். ஆக ஒருவரின் திறமையை மதிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும்.

ராதாரவி என்றால் அவர் கெட்ட வார்த்தையில் பேசுவார் என்று ஒரு கருத்து பரவுகிறது. நான் கெட்ட வார்த்தையில் பேசக் கூடாது என்கின்ற திடகாத்திரமான முடிவோடு தான் வந்தேன். கோபம் வந்தால் எதைப் பற்றியும் பயப்படமாட்டேன், எனக்கு தோன்றியதைப் பேசிவிடுவேன். ஆனால் இங்கு நான் கோபப்படும் படி எதுவுமே இல்லை.  இந்த நடிகர்களுக்கு அவர்களின் நிலை உயர்ந்துவிட்டால் எங்கிருந்து தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசும் அந்தப் பேச்சையும் கைதட்டி ரசிக்கத் தானே செய்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது.  இதை தைரியமாகத் தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள்.  என்னைச் சார்ந்து படங்கள் எடுக்கப்படுவதில்லை. ஹீரோவைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் நான் இருக்கிறேன். நீங்கள் என்னை உதாசீனப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்த வேண்டும். இன்றும் நான் 5 படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒருவர் கேட்டார் ஏன் படங்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது என்று. நான் இதாவது இருக்கிறதே என்று கூறினேன்.

இந்த டேனியல் யார்..? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தெரியவில்லை. ஏனோ பார்த்ததும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டான். ஒரு படத்தில் நன்றாக நடித்திருக்கிறாய் என்று நான் அவனுக்கு போன் செய்தேன். அது மட்டுமே நான் செய்த தவறு. அவனுக்கு தெரிந்துவிட்டது, இவன் ஒரு இளிச்சவாயன் என்று, போனை பேசி முடிக்கும் போது வீட்டுக்கே வந்துவிட்டான். இப்படிதான் அவன் எனக்குப் பழக்கம். தியேட்டர் திறப்புவிழாவிற்கு அழைத்தான். எனக்கு தியேட்டர் எப்பொழுதுமே பிடிக்கும். ஏனென்றால் நான் கருவானதே அங்கு தான். நான் அவனிடம் கேட்டேன், எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள் என்று, அவன் 40 பேரில் ஒன்பது பேர் தேர்வாகியிருக்கிறார்கள் என்றான். இதுவே பெரிய வெற்றி தான்.
உண்மையாகவே டேனியல் மிகவும் திறமைவாந்தவர். இன்று டேனியல் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால், பல சிரமங்களுக்கு இடையில் தான் இதை நடத்துகிறார்.  இந்த சிரமங்களுக்கு இடையிலும் அவர் சிரிப்பது தான் அவருக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும்.  இன்னும் ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் என்பதை ஒரு சவாலாகவே இங்கே கூறிக் கொள்கிறேன். யார் என்ன தொழில் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களை மதியுங்கள். எந்தத் தொழிலும் குறைந்தது அல்ல. நம் வாழ்வை முடித்து வைப்பவர்கள் இந்த வெட்டியான்கள் தான். ஹாலிவுட் நடிகர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதைப் போல்  வெட்டியான்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தால், இந்த ஊர் தாங்காது.  என் அப்பாவுக்கு கல்வியறிவு கிடையாது. எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாமே கேள்வி ஞானம் தான்.  இப்பொழுதும் என் அப்பா நடித்த சில காட்சிகளைப் பார்த்து இவர் எப்படி இப்படி நடித்தார் என்று வியப்பேன். ஏனென்றால் யாரையும் பார்த்து நடித்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிகழ்விற்கு ராதாரவி வந்தார், ஏதேதோ பேசினார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். புரிந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். புரியாததை விட்டுவிடுங்கள்.

டேனியல் தொடங்கியிருக்கும் பள்ளி சிறப்பாக செயல்பட ஏதேனும் ஆலோசனை கொடுங்கள். நானும் கண்டிப்பாக அவனுக்கு ஆலோசனை கொடுப்பேன். உன் கைக்காசைப் போட்டு அதிகம் செலவு செய்யாதே என்று கூறுவேன். ஏனென்றால் நாளைக்கி இதிலிருந்து வரும் ஒரு மாணவனே பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றால், பழையதை மனதில் வைத்து நடந்து கொள்வார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவின் வியாதி அது.  டேனியல் நீ சோர்ந்து போகும் போது எனக்கு போன் செய். நான் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். நான் உன்னை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வேன். உன் வளர்ச்சிக்கு உதவ நிறைய நண்பர்கள் உன்னோடு இருக்கிறார்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். யாரும் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள். அவர்கள் உங்களோடு இருப்பது தான் உங்களுக்கு ஆசிர்வாதம். குழந்தைகளை சுதந்திரமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் வளருங்கள்.  இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் தமிழ் இனத்தில் சார்பாக நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் என்றார்.

About Publisher

Check Also

Thalapathy69 announcement!

KVN Productions is thrilled to officially announce its upcoming project, Thalapathy-69 as its first Tamil …