விக்ரம் பிரபு வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வாணி போஜன், தனஜெயன், வேலூர் ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தலைநகரம் 2 படத்துடன் சேர்ந்து கிட்டத்தட்ட எட்டு படங்கள் வெளியான நிலையில் விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு படமும் வெளியாகி இருக்கிறது. ஒரே விஷயத்தை மையமாக வைத்து தான் படம் முழுக்க கதை சென்று கொண்டிருக்கிறது. அதாவது படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு அரவிந்த் என்ற கதாபாத்திரத்தை நடித்துள்ளார்.
இவருக்கு ஒரு புறம் அன்பான குடும்பம் மற்றொருபுறம் அழகான காதலி வாணி போஜன் என சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். படத்தில் தொடக்கத்திலேயே விக்ரம் பிரபு ரவுடிகளால் கடத்தப்படுவதாக காட்டப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் பிரபுவுக்கு கண்பார்வையில் குறை இருக்கிறது.
அதாவது அதிக வெளிச்சத்தில் தான் கண்பார்வை நன்கு தெரியும் என்றும் குறைந்த வெளிச்சத்தில் கண் தெரியாது. மேலும் எதற்காக விக்ரம் பிரபுவை ரவுடிகள் கடத்தினார்கள் என்பதுதான் சஸ்பென்ஸ். ஆனால் அதற்கான காரணத்தை வலுவாக இயக்குனர் சொல்லவில்லை. மேலும் ஏற்கனவே நிறைய படத்தில் பார்த்த காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
விக்ரம் பிரபு மீது அவரது அப்பா மிகுந்த அன்பு வைத்திருந்தாலும் தந்தை, மகன் இடையேயான உறவை காட்ட இயக்குனர் தவறிவிட்டார். விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் இடையே காதல் காட்சிகளும் செயற்கையாகத்தான் இருந்தது. படத்திற்கு பிளஸ் விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பு.
க்ளைமாக்ஸில் பார்வை குறைபாடு உள்ள போது சண்டைக்காட்சியில் வில்லனை கையாண்ட விதம் அருமையாக இருந்தது. மேலும் படத்திற்கு ஒளிப்பதிவு கூடுதல் வலு சேர்த்துள்ளது. மொத்தத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்புக்காக பாயும் ஒளி நீ எனக்கு படத்தை ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.