Home / Uncategorized / D3 Audio Launch Event

D3 Audio Launch Event

நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். கலை இயக்கம் – ஜெயசீலன் , ஸ்டண்ட் -ராம்போ விமல், படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம் .

‘D3 ‘ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன் ஜி , நடிகர் அபிஷேக், கூல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தின் இசை அமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா பேசும்போது,

” இதுவரை காதல் கதைகளுக்கே இசையமைத்துக் கொண்டு இருந்தேன்.அந்தப் படங்களுக்கு நிறைய பாடல்கள் செய்திருக்கிறேன். வேறு வகையான படங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போதுதான் பாலாஜி,தன் படத்துக்கு எடுத்திருந்த சில காட்சிகளைக் காட்டினார். எனக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு வித்தியாசமான வாய்ப்பு என்பதைப்புரிந்து கொண்டு இதில் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன்” என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது ,

“இது ஒரே நாளில் நடக்கும் கதை.இந்தப் படத்தின் வரிசையில் D2, D1 படங்களையும் உருவாக்க இருக்கிறோம். ஒரு விபத்து, ஒரு கொலை, ஒரு காணவில்லை கேஸ் என்ற மூன்றையும் பின்னணியாக வைத்து இந்தக் கதை உருவாகி இருக்கிறது.சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே மனித உழைப்பைக் கடுமையாகக் கொடுக்க வேண்டி இருக்கும்.
இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம்.படப்பிடிப்பு நாட்களில் ஏழு நாட்கள் 24 மணி நேரமும் கூட படப்பிடிப்பு நடந்தது. அந்த அளவிற்கு உழைத்தோம் .பிரஜின் இந்தப் படத்திற்காகக் கொடுத்த ஆதரவும் உழைப்பும் அளவிட முடியாதது.இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் சாமுக்கு மிகப்பெரிய நன்றி.சினிமாவில் யாரும் எளிதாக மேலே வர முடியாது. பிரஜின் போன்ற உழைப்பாளிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. அவருக்கான இடம் நிச்சயம் கிடைக்கும்.இந்தப் படம் பல்வேறு தடைகளையும் இடையூறுகளையும் கடந்து தான் உருவாகி இருக்கிறது.

இந்தப் படப்பிடிப்பின் போது கோவிட் காலத்தில் ஒருவர் இறந்து விட்டார்.இப்படி ஆயிரம் தடைகள் கடந்த பிறகு தான் இங்கு வந்து நிற்கிறோம்.

இன்று இந்த விழா நடக்கிறது. ஆனால் நேற்று வரை பிரச்சினை இருந்தது. இந்தப் படம் நாட்டின் ஒரு முக்கிய பிரச்சினை பற்றிச் சொல்கிறது.இந்த படத்தைப் பார்த்தால் வெளியே யாரிடமும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்க கூட யோசிக்கிற நிலை வரும்.

இது திகில் படம் காலம் என்கிறார்கள்.ஆனால் யாரும் வேண்டுமென்றே அப்படி எடுப்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில் இந்த வகை படங்கள் தான் எடுக்க முடியும். அதனால் தான் இதை நான் எடுத்திருக்கிறேன்.இது ஒரே இரவில் எழுதிய கதை என்று சொல்லலாம். பீமாஸ் கிரிக்கெட் கிளப் என்று இருந்த நண்பர்கள் குழு தயாரிப்பு நிறுவனமாகி உள்ளது.இந்தப் படத்தில் பணியாற்றி ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.இப்படத்தை வெளியிட உதவிய ஜெனிஸ் அவர்களுக்கும் நன்றி”என்றார்.

நடிகர் பிரஜின் பேசும்போது,

“நான் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறேன் 19 ஆண்டுகளாக இந்த ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 24 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கான இடத்தை இன்னும் அடையவில்லை. தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன் .நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை .பாதியில் நின்று போனதில்லை.

நான் முதல் முதலாக போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளேன். எனது அப்பா காவல்துறையில் இருந்தவர் தான்.தனது துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.எனவே போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை.இது ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை. இந்தப் படத்தில் என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கதை கேட்டுக் கொண்டதால் நான் நிர்வாணமாக ஓடி இருக்கிறேன்.

படம் பண்ணுவதை விட இன்று அதை விளம்பரப்படுத்துவது சிரமமாக உள்ளது .நாங்கள் முடிந்தவரை அதை சாத்தியப்படுத்தி இருக்கிறோம்.அதற்குப் பலரும் ஒத்துழைத்தார்கள்.இந்தப் படத்தின் போஸ்டர்கள் பேசப்பட்டன.என் சினிமா, தொலைக்காட்சி அனுபவங்களில் இந்தப் படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது. நிறைய நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடந்தது. அனைவரும் நன்றாக ஒத்துழைத்தனர்.

விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. இருக்கிற நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. எனவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். முடிந்தவரை உழைத்திருக்கிறேன் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன்”என்றார்.

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் பேசும் போது,

“இந்த விழாவுக்கு என்னை சாம், மோகன் ராஜ் அழைத்தார்கள். எனக்கு இப்போது இவர்களையெல்லாம் பார்க்கும்போது, சென்னை 28 பட அனுபவம் ஞாபகம் வருகிறது. அது முழுக்க முழுக்க நண்பர்களைப் பற்றியது. நண்பர்களின் கூட்டணியால் வெற்றி பெற்றது. அதேபோல் இங்கு உள்ளவர்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது. நான் அரசியல் பணிக்குச் சென்று விட்டதால் சினிமாவில் சற்று இடைவெளி வந்தது போல் உள்ளது.
அப்பா விட்டுச் சென்ற அரசியல் பணியையும் தொழிலையும் நான் செய்து வருகிறேன். நான் எல்லாவற்றிலும் முழு முயற்சியோடு இருப்பேன்.
எந்த வேலையிலும் ரசித்துச் செய்தால் வெற்றி உண்டு.உண்மையாக உழைத்தால் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஜெயிக்கலாம். முழு மனதுடன் எதையும் செய்ய வேண்டும் .அப்படி மக்களுக்குச் சேவை செய்யவே நான் அரசியலில் இருக்கிறேன்.இந்தச் சினிமா விழாவில் சிலகால இடைவெளிக்குப் பின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். D3 படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் “என்றார்.

இயக்குநர் மோகன் ஜி பேசும் போது,

” எனக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை .இருந்தாலும் முட்டி மோதிக் கற்றுக் கொண்டேன்.
நான் பழைய வண்ணாரப்பேட்டை படம் எடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர்களுக்கு எடுத்தது ஏதாவது போட்டுக் காட்ட வேண்டும் என்று நானும் பிரஜினும் நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம்.அப்போது ஒரு 70 எம்எம் கேமராவை வைத்துக் கொண்டு நானும் பிரஜினும் அலையாத அலைச்சல் இல்லை. சென்னை முழுக்க சுற்றிச் சுற்றி அலைந்து எடுத்தோம்.
அப்படி என்னுடன் அவர் நான்கு வருடங்கள் என் கூடவே வந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட உழைப்பாளிஅழைத்ததற்காகத்தான் இங்கே நான் வந்துள்ளேன்.

அவர் ரசிகர்களிடம் ஒரு சார்மிங் கதாநாயகனாக வர வேண்டியவர் .ஏனோ தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எனது அடுத்தடுத்த படங்களில் அவரைப் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அவருக்கேற்ற மாதிரி கதை அமைவதில்லை. அந்த அளவுக்கு எனது படங்களின் பாதை மாறிவிட்டது.

பிரச்சினையான கதைகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.நான் இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன் முதல் காட்சியிலேயே அவர் அதிர வைக்கிறார்.

சினிமா படம் எடுப்பதும் இன்று அதை வியாபாரம் செய்வதும் சாதாரணமான ஒன்றல்ல. தினந்தோறும் தடைகளையும் பிரச்சினைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் போராடிக் கொண்டிருக்கிறோம் விடமாட்டோம் .எனது இரண்டு வெற்றிப் படங்களுக்கு பிறகு அடுத்து நான் எடுத்துள்ள பகாசுரன் தியேட்டரில் போட்டால் நிச்சயமாக வெற்றி பெறக் கூடிய படம். முதல் நாளே 80 சதவீதம் கூட்டம் வருவதற்குத் தயாராக உள்ளது. எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது. இருந்தாலும் மற்ற வியாபார விஷயங்களுக்காக அது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். இந்த D3 படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர். மனோகர் பேசும்போது,

” நான் எத்தனையோ விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன் .ஆனால் இந்தச் சினிமா விழா மேடை எனக்கு மிகவும் புதியது. இது முதல் மேடை தான் என்று சொல்வேன். நான் சினிமா பார்த்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது உங்களையெல்லாம் பார்க்கும் போது சினிமா பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது. இவர்களது உழைப்பைப் பார்க்கும் போது அதை மனிதர்கள் அங்கீகரிக்கிறார்களோ இல்லையோ ஆனால் உண்மையான உங்கள் உழைப்பை இறைவன் அங்கீகரிப்பான் என்று நான் சொல்வேன். முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி இந்திய மக்களுக்காக 3500 கிலோ மீட்டர் நடக்கிறார் .அவர் தினந்தோறும் எவ்வளவு தூரம் நடக்கிறார் எவ்வளவு மக்களைச் சந்திக்கிறார். எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்று கவனியுங்கள் .அதையும் உங்கள் படங்களில் காட்டுங்கள்” என்று கூறினார்.

நடிகர் அபிஷேக் பேசும்போது,

” இந்த D3 எனக்கு முக்கியமான படம். நேரம் என்பது சரியாக வந்து சேரும்போது நல்லது நடக்கும். இங்கே வந்துள்ள மோகன் ஜி பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் .அவரது இயக்கத்தில் படம் பண்ண எனக்கு ஆசையாக இருக்கிறது. D3 இயக்குநர் பாலாஜி கடைசி நேரத்தில் தான் என்னை அழைத்தார். எனக்கு வர வேண்டியது வந்து சேரும். அவர் படத்தின் காட்சிகளை கோரியோகிராப் செய்தார்.அந்த அளவிற்கு எல்லா திறமைகளும் உள்ளவர்.

இதற்கு முந்தைய படத்தில் நடித்ததால் என் முடி சற்று நீளமாக இருந்தது .இதில் என்னைக் குறைக்க சொன்னார்.அந்த அளவிற்கு அவர் சமரசம் இல்லாதவர்.
பிரஜின் நடிப்பில் குட்டி விஜய் சேதுபதி போல தோன்றுகிறார். அவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு” என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம் பேசும்போது,

“படத்தின் டிரைலர் பாடல்களை பார்த்தேன். அருமையாக உள்ளது. ஆங்கிலப் படம் போல இருந்தது. பிரஜின் இந்தப் படத்தில் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.

இங்கே வந்துள்ள மோகன் ஜி பலருக்கும் யாருக்கும் தெரியாமல் உதவி செய்து கொண்டிருக்கிறார். அடுத்த அவரது படத்துக்கு இப்போதே ஊர்ப் பகுதிகளில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.இந்தப் படம் பல கஷ்டங்களுக்குப் பிறகு தான் உருவாகி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் பட்ட கஷ்டத்தை கேள்விப்பட்டபோது வயிறு எரிந்தது. எந்த தயாரிப்பாளரும் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சங்கத்திடம் சொல்லுங்கள் .நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம்.

தயாரிப்பாளர்களுக்கு படத்திற்கான வசூல் முழுமையாக போய்ச் சேர்வதில்லை. உலகம் பூராவும் 110 நாடுகளில் மக்கள் தமிழ்ப்படங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சினிமாவில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் குடிக்கிற மாதிரி காட்சிகள் வைக்காதீர்கள். நாட்டில் இன்று 80% பேர் மக்கள் குடித்து நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள். நாட்டில் பல்வேறு போதைகள் உள்ளன. மது போதை மிக மோசமாக உள்ளது.இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,

” நான் எந்தப் படத்தின் பிரமோஷனுக்கும் எளிதாகப் போவதில்லை. அந்தப் படத்தின் டிரைலர் எனக்கு பிடித்திருந்தால் தான் போய் வாழ்த்துவேன். இந்தப் படத்தின் டிரைலரை எனக்கு அனுப்பி, நன்றாக இருந்தால் வாருங்கள் என்றார் இயக்குநர். தட்டிக் கழிக்கலாமோ என்று பார்த்தேன். ஆனால் ட்ரைலர் பார்த்து அசந்து விட்டேன். எனவேதான் வந்து வாழ்த்துகிறேன் .படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

About Publisher

Check Also

Global Star Ram Charan’s RC16 with an internationally acclaimed team launched extravagantly

Global Star Ram Charan’s RC16 with an internationally acclaimed team launched extravagantly Global star Ram …