Home / cinema / Movie Review / Yaanai Movie Review

Yaanai Movie Review

இரண்டு குடும்பம்!  அவர்களுக்குள்ளான பிரச்சனை. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற ஹரியின் டெம்ப்லேட் கதைதான் யானை. இந்தக் கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் மசாலா தூவி கொடுத்துள்ளார்.ராமஸ்வரத்தில் வில்லன், ராமநாதபுரத்தில் நாயகன் குடும்பம். இவர்களுக்குள் என்ன பிரச்னை! அதனால் நாயகன் குடும்பம் என்ன ஆனது என்பதை தனக்குரிய பார்முலாவில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் ஹரி.

ராமநாதபுரத்தில் இறால்  கம்பெனி, பஸ், லாரி என பல தொழில்களை செய்துவரும் ராஜேஷிற்கு நான்கு மகன்கள். அதில் இளையமகன் அருண் விஜய் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்.

அவரின் மூன்று அண்ணன்களாக வரும் சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் ஆகியோர் சாதி பெருமையை நெஞ்சில் சுமந்து சுத்துகின்றனர். அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டவராகவும், குடும்பத்திற்கு வரும் பிரச்னைகளை தடுப்பவராகவும் இருக்கிறார் அருண் விஜய். அதேபோல் கிருஸ்துவ பெண்ணை காதலிக்கிறார். அனைவருடனும் அன்பு பாராட்டுகிறார்.

காதல், செண்டிமெண்ட் என கதை நகரும் சமயத்தில் வில்லன் சிறையில் இருந்து வெளியே வருகிறான். அதேசமயம் நாயகன் குடும்பத்தை வேரோடு அழிக்க நினைக்கிறான். அதை தடுக்க முயற்சிக்கும் நிலையில் அண்ணன் மகள் காணாமல் போகிறாள். அதற்கு அருண் விஜய்தான் காரணம் என சமுத்திரகனி அவரை வீட்டை விட்டு விரட்டுகிறார். அவருடன் தாய் ராதிகாவும் வெளியேறுகிறார்.இதற்குபின் அண்ணன் மகளை கண்டுபிடித்தாரா? தன் குடும்பத்திற்கு வரும் ஆபத்தை தடுத்தாரா? அதில் என்ன பிரச்னை சந்தித்தார் என்பது மீதி கதை.

அண்ணன்கள் கதாபாத்திரம் மூலம் சாதி பெருமையையும், தம்பி கதாபாத்திரம் மூலம் சாதி மறுப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை கூற முயற்சித்திருக்கிறார் ஹரி. (அது சரிசமமாக இருக்கிறதா என்பது வேறு விஷயம்) அதுவும் அண்ணன் மகளை கொல்ல திட்டமிடும் சாதி சங்கத்தினரை புரட்டி எடுக்கிறார் அருண்விஜய். அந்த சண்டை காட்சியை Single Short-ல் நடித்து கொடுத்துள்ளார்.

வில்லனுக்கும் நாயகனுக்கும் போட்டியாக ஆரம்பிக்கும் படம் ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்க்குள் நுழைகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசுகின்றனர். யானை படத்தின் பாதி நேரம் அண்ணன் மகளை அழைத்து வரவே அலைகிறார் அருண் விஜய். ஆனால் சமுத்திரகனி வில்லன் ராமசந்திர ராஜூவுடன் கூட்டணி அமைத்து தம்பிக்கு எதிராக சதி செய்கிறார். அதில் வென்றாரா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

ஹரி படங்களில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்தப் படத்திலும் இருக்கிறது. அத்துடன் அவரின் முந்தைய படங்களின் சாயல் ஆங்காங்கே இருக்கிறது. குறிப்பாக பூஜை படத்தின் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் யானை நினைவூட்டுகிறது.  யோகி பாபுவின் நகைச்சுவை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் இது காமெடியா என கேட்க வைக்கிறது. மேலும் படத்தில் வில்லனுக்கும் நாயகனுக்குமான நேரடி பகை தடம் மாறுவதும், அண்ணன் மகளை அதிக நேரம் தேடி அழைவதும் மைனஸ். படத்தின் நாயகி பிரியா பவானி சங்கருக்கு பெரிய அளவில் முக்கியதுவம் இல்லை. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கதைக்கு உதவுகின்றன. அதற்கு ஏற்றார்போல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கமர்ஷியல் படத்திற்கும் கச்சிதமான இசை கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். அதேபோல் சமீபத்திய ஹரி படங்களில் இடம்பெற்ற ஒளிப்பதிவு போல் இல்லாமல் சாமி, கோவில் படங்கள் போல் அமைந்திருப்பது நிம்மதி. முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை மனதில் வைத்தே யானை படத்தை எடுத்துள்ளார் ஹரி. கமர்ஷியல் படங்களை விரும்புவர்களுக்கும், குடும்ப உணர்வுகளை மதிப்பவர்களை இந்தப் படம் கவரலாம்.

Openmictamil Rating : 3.75/5

Yaanai Movie Review tamil: முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை மனதில் வைத்து யானை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் ஹரி.

About Publisher

Check Also

Jawan Tamil Movie Review – 🌟🌟🌟

Bollywood Badshah Shah Rukh Khan is back again to entertain his fans and audience with …