Breaking News
Home / cinema / Movie Review / Payanigal Gavanikkavum Review

Payanigal Gavanikkavum Review

உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேலுவும் விதார்த்தும் இணைந்துள்ள படம்தான் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படம் இது.

பள்ளி நூலகத்தில் புத்தகக் காப்பாளராக இருக்கிறார் விதார்த். செவித்திறன் , பேசும் திறன் இல்லாதவர். அவருடைய மனைவி லஷ்மி ப்ரியா. அவரும் கணவரைப் போல் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத அழகான குடும்பம்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கருணாகரன் திருமணத்துக்காக சென்னை வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதீத ஆர்வமுடைய அவர், ஒரு நாள் மாநகரத் தொடர்வண்டியில் பயணம் செய்கிறார். அப்போது ஓய்வின்மையால் அசதியில் தூங்கிகொண்டிருக்கும் விதார்த்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்கிறார். அந்தப் பதிவு விதார்த்தை தவறாக சித்தரிப்பதோடு அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவதற்கு சட்டத்தின் உதவியை நாடுகிறார். விதார்த் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா, கருணாகரன் காவலர்கள் பிடியில் சிக்கினாரா? என்பது மீதிக்கதை.

சமூக வலைத்தளங்களில் சந்தாதாரர்களை கவர்ந்திழுக்க அலைப்பேசி உபயோகிப்பவர்கள் செய்யும் சிறு தவறுகள் எப்படி பிறருக்கு அவப்பெயரை உண்டாக்குகிறது என்பதை நகைச்சுவை, குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து வாழைநாரில் பூத்தொடுத்ததுப்போல் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சக்திவேல்.

நூலகப் பணியாளராக வரும் விதார்த் நடிப்பில் வியக்கவைக்கிறார். சொல்ல நினைக்கும் விஷயத்தை பேசும் திறன் இல்லாத காரணத்தால் சொல்லத் துடிக்கும்போதெல்லாம் படம் பார்ப்பவர்களின் மனதையும் துடிக்கச்செய்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

குடும்பத் தலைவி வேடத்தில் லஷ்மி ப்ரியாவின் பாத்திரமும் அவரது நடிப்பும் நன்று.

படத்தின் இன்னொரு நாயகன் எனுமளவுக்கு கருணாகரனுக்கு முக்கியமான வேடம். காதலைச் சொல்ல தவிப்பது, குடும்பத்தினரிடம் பாசமழை பொழிவது, பிரச்சனையில் சிக்கிய பின் புழுவாகத் துடிப்பது என தன்னுடைய பாத்திரத்துக்கு அனுபவ நடிப்பை வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்.

அவருடைய மனைவியாக வரும் மாசூம் சங்கர் அழகு.

அக்கா கணவராக வரும் மூணார் ரமேஷ், காவல் அதிகாரியாக வரும் பிரேம், வீட்டு உரிமையாளராக வரும் கவிதாலாயா கிருஷணன், விதார்த் நண்பராக வரும் ராமச்சந்திரன், கருணாகரனின் நண்பராக வரும் சரித்திரன் என அனைவரின் நடிப்பும் சிறப்பு.

பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

நவீன கண்டுபிடிப்புகளை விளையாட்டு என்ற பெயரில் பயன்படுத்தும்போது அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மிக அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்!

இந்தப் படம் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.

Over All Watchable Movie 👁️👁️

Openmic Rating : 2.8/5

#PayanigalGavanikkavumOnAHA is a decent remake of Vikruthi with good performances by all lead actors

About Publisher

Check Also

கபில் ரிட்டன்ஸ்’ Tamil Movie Review ⭐️⭐️⭐️

’கபில் ரிட்டன்ஸ்’ திரைப்பட விமர்சனம்தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கபில் …