சென்னை, பிப்.14- இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கும், 74 வயது முதியவருக்கும் டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றி காதலர் தினமான இன்று அவர்களின் துணையோடு சேர்த்து வைத்து அவர்களின் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வரும் வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனை.
இந்த வெற்றிகரமான சிகிச்சையை இம்மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணரும் டாக்டருமான கே. தாமோதரன் மற்றும் டாக்டர் கதிரேசன் தலைமையில் நிபுணத்துவமிக்க டாக்டர்கள் குழு செய்தது. இந்த இரு நோயாளிகளுக்கும் பல்வேறு நோய்கள் இருந்ததோடு அவர்களின் இதயத்தின் முக்கியமான பெருநாடி வால்வு பகுதியில் சுருக்கமும் இருந்தது. அந்த சுருக்கத்திற்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை இம்மருத்துவமனை குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர். வயதான இந்த நோயாளிகளுக்கு பிரசாந்த் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் குழு, சேதமடைந்த பெருநாடியை ஒரு புதிய வால்வுடன் இணைத்து அவர்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது.
பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸ் என்பது பெருநாடி வால்வு திறப்பின் குறுகலாகும், இது இடது வென்ட்ரிக்கிளிலிருந்து பெருநாடிக்கு ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. வயதானவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 75 வயதான திருமதி சங்கரவடிவு கீழே விழுந்து வலது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வகை 2 நீரிழிவு நோய் உள்ளது. இந்த நிலையில் இம்மருத்துவமனையின் எலும்பியல் குழு ஆலோசனையின்படி, நோயாளிக்கு அதிக ஆபத்துள்ள தொடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்காக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை காரணமாக தமனியில் கடுமையான பெருநாடி வால்வு குறுகல் இருப்பது கண்டறியப்பட்டது, இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் அவரது இதயம் செயலிழக்க வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து இதய நோயியல் நிபுணர் டாக்டர் தாமோதரன் வழிகாட்டுதலின்படி டாக்டர்கள் குழு அவருக்கு டிரான்ஸ்கேட்டர் TAVR (பெருநாடி வால்வு பொருத்தும்) சிகிச்சையை அளித்தனர். இதேபோல் 74 வயதான திரு நாதர்கனி தலைச்சுற்றல் மற்றும் கடுமையான நெஞ்சு வலி அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த சிகிச்சை அவருக்கும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிகிச்சை குறித்து இம்மருத்துவமனை டாக்டர் தாமோதரன் கூறுகையில், காதலர் தினத்தன்று திருமதி சங்கரவடிவு மற்றும் திரு நாதர்கனி ஆகியோரின் உயிரைக் காப்பாற்றி அவர்களை மீண்டும் அவர்களது துணையுடன் இணைக்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நாங்கள் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இவர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையானது மிகவும் சிக்கலாக இருந்ததோடு சவாலாகவும் இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, அத்துடன் நாங்கள் மிக வேகமாக செயல்பட வேண்டியதிருந்தது. எலும்பு முறிவு காரணமாக 75 வயதான திருமதி சங்கரவடிவு எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு வழக்கமான அறுவை சிகிச்சைக்கு முந்தைய இதய பரிசோதனையின்போது இதயத்தில் பிரச்சினை இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் காரணமாக நீரிழிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்டோம். இந்த நிலையில் அவருக்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு பொருத்தும் சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்து அந்த சிகிச்சையை அளித்தோம். எங்கள் மருத்துவமனையில் உயர்தர இதய சிகிச்சைக்கான பல்வேறு வசதிகள் உள்ளன என்று தெரிவித்தார்.
டாக்டர் கே. தாமோதரன் மற்றும் டாக்டர் கதிரேசன் தலைமையிலான டாக்டர் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின் இந்த இரு நோயாளிகளும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அன்றைய தினம் மாலையே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நன்றாக குணமடைந்த அவர்கள் மருத்துவமனையிலிருந்து நான்கு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், இந்த வயதான நோயாளிகளுக்கு அளித்த சிறப்பான சிகிச்சை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சேவைக்காக டாக்டர் தாமோதரன் மற்றும் அவரது நிபுணர் குழுவுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சரியான நேர தலையீடு இன்று நோயாளிகளுக்கு ஒரு புதிய புத்துணர்வையும் வாழ்வையும் அளித்துள்ளது. எங்கள் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு இந்த இரட்டை டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு பொருத்தும் சிகிச்சை ஒரு சிறந்த சான்றாகும். நோயாளிகள் இருவரும் நன்றாக குணமடைந்து வருவதோடு, காதலர் தினத்தில் அவர்களின் துணையோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்கு அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.
From left to Right : Dr. K. Dhamodaran, Intervention Cardiologist. Patient Nadhergani and his wife, Patient Sankaravadivu and her son, Dr. Prashanth Krishna, Dr. M. Kathiresan, Cardiologist and Dr. Bhaskar, CEO, Prashanth Hospitals