Breaking News
Home / cinema / Open Review / ஆறாம் நிலம் – Open Review

ஆறாம் நிலம் – Open Review

இலங்கை மண்ணில் இரண்டு லட்சம் ஈழத் தமிழர்களை சிங்களப் பேரினவாதம் இனப் படுகொலை செய்த 2009 முள்ளிவாய்கல் யுத்தம் இறுதிப் போர் என்று சொல்லாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

‘இறுதிப் போர்’ என்ற அந்த சொல்லாக்கம், ‘இனி இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு போரின் வலிகளே கிடையாது’ என்பதுபோன்ற புனைவை உருவாக்குறது. ஆனால், ஐபிசி தமிழ் ஊடகத்தின் தயாரிப்பில் அனந்த ரமணன் இயக்கியிருக்கும் முழு நீள ஈழத் தமிழ் திரைப்படமான ‘ஆறாம் நிலம்’, இலங்கையில் தற்போது வசித்துவரும் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான துயரங்களையும் என்றைக்கும் ஆறாத ரணங்களின் மீது குத்திப் பார்க்கும் தற்காலச் சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழரின் பிணக் குவியலுக்கு நடுவே.. குண்டு மழைக்கு தப்பித்த தமிழர்கள் ஆயிரக் கணக்கில் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால், சரணடைந்தவர்களோ கூட இன்று ‘காணமல் ஆக்கப்பட்டோர்’ பட்டியலில் எங்கிருக்கிறார்கள்; எப்படியிருக்கிறார்கள், இந்த 12 ஆண்டுகளில் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று கூற மறுக்கும் சிங்கள அரசாங்கம் ‘காணாமல் போனோர் இனி திரும்பி வரமாட்டார்கள்’ என்று சொல்வதை நெற்றிப் பொட்டில் அடிதார்போல் சொல்லியிருக்கிறது.

சரணடைந்தவர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் ‘காணாமல் போனோர்’ என்றழைப்பதும் அதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, உறவுகளைத் தொலைத்தவர்கள் அவர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கையுடன் போராடி வருவதும் ஈழத்தில் தொடரும் பெருந்துயரம். உலக மக்களின் ரட்சகன் என்று சொல்லிக்கொள்ளும் ஐநாவின் பார்வைக்கு இந்த விடயம் கொண்டு போகப்பட்டும் அது சர்வதேச சமூகத்திடம் எடுபடவிடமால் செய்யப்படுவதில் ஈழத் தமிழ்ச் சமூகமும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் பெரும் வலியைச் சுமந்து நிற்கிறது.

சொந்த நிலத்தில், செல்லடிக்கப்பட்டு சிதிலமாகி, குட்டிச் சுவராக கிடக்கும் மச்சு வீட்டுக்கு முன்பாக குடிசை போட்டு வாழும் அவலம் ஒருபுறம், சொந்த மண்ணில் வாழமுடியாமல் புலம்பெயர்ந்து வாழும் அவலம் மறுபுறம் என ஈழத்தமிழரின் தொடர் வாழ்வைப் பேசும் இந்தத் திரைப்படத்தில், காணாமல் அடிக்கப்பட்ட கணவன் வருவான் என்று நம்பிக் காத்திருக்கும் ஓர் இளம் தாயையும் தன்னுடைய தகப்பன் வந்துவிடுவான் என எதிர்பார்த்திருக்கும் 12 வயது இளம் சிறுமியையும் அவளுடைய அப்பம்மாவையும் சுற்றும் உண்மைகளையே சம்பவங்களாக்கி திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

காணாமல் ஆக்கப்பட்ட தன்னுடைய கணவனைத் தேடிக்கொண்டிருக்கும் இளம் தயாக நவயுகா நடித்துள்ளார். ஈழப்பெண் என்பதால் வலியையும் தடம் மாறாத் தமிழ்ப் பண்பாட்டையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தை வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டு, போர் பகுதிகளை மீள் உருவாக்குவதாக விளம்பரப்படுத்திகொள்ளும் சிங்கள் அரசின் விளம்பர பலகை ஒன்றில், தன்னுடைய தந்தையுடன்மோட்டார் சைக்கிளில் புகைப்படமாக அமர்ந்திருக்கும் சிறுமையின் ‘ஹோர்டிங் பலகை’யை பள்ளி செல்லும்போதெல்லாம் பார்த்து ஏங்கியபடி செல்லும் நவயுகாவின் மகளாக தமிழரசியும் ஈழத்தில் வாழும் இன்றைய மக்களின் பெரும் பிரதிகளாகி நிற்கிறார்கள்.

தமிழர்களைக் கொண்டே தந்திரமாக மிதிவெடி அகற்றும் வேலையைச் செய்யும் சிங்கள் ஆரசாங்கத்தின் என்.ஜி.ஓ வேலைக்குச் செல்கிறார் நவயுகா. அந்தப் பணியில் கொஞ்சம் கவனம் சிதறினாலும் காத்திருக்கும் மிதிவெடி மீதி வாழ்க்கையையும் முடித்துவிடும் என்கிற சூழ்நிலையில் நவயுகாவையும் அவர்களைப்போன்ற குடும்பங்களை சுற்றியிருக்கும் மனிதர்களின் அவலத்தையும் பளிச்சென்று வெளிகாட்டுகிறது படம்

“அப்போ நம்மளக் காப்பாத்திக்கொள்றதுக்காக மிதிவெடியை புதைச்சோம். இப்ப அதை எடுக்கிறோம்…“இரண்டுமே நம்ம நிலத்துக்காகத்தான் செய்யரோம்” எனும்போது ஈழத்தமிழர் பறிகொடுத்த நிலமும் பசித்திருக்கும் அவர்களின் வயிறும் இன்றைய நிதர்சனம் என்பதை உரைக்கின்றன.

பாராட்டி ஆதரிக்க வேண்டிய இந்த முயற்சியை ஐபிசி தமிழ் ஊடகத்தின் யூடியூப் அலைவரிசையில் வரும் 24- ஆம் திகதிமுதல் கண்டு கண்ணீர் சிந்தலாம்.

OPEN RATING 2.5/5

About Publisher

Check Also

Hostel Movie Review

சம்மர் ஸ்பெசலாக ரசிகர்களுக்கு ஒரு ஹாரர் காமெடி படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். ஒரு காதல் காரணத்திற்காக …